விருதுநகர்
விநாயகர் சிலை ஊர்வலம்
|மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று மாலை விருதுநகரில் 42 விநாயகர் சிலைகள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலையில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆலங்குளம்
ஆலங்குளம் பகுதியில் அண்ணாநகர், பாரதிநகர், தேவர் நகர், பெரியார் நகர், இருளப்ப நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய இடங்களில் இருந்த விநாயகர் சதுர்த்தி சிலைகள், ஆலங்குளம் சிமெண்டு ஆலை குவாரியில் கரைக்கப்பட்டது.
கண்மாய் பட்டி கிராமத்தில் இருந்த விநாயகர் சதுர்த்தி சிலை தலக்குடையார் அய்யனார் கண்மாயிலும், கண்டியாபுரத்தில் இருந்த விநாயகர் சதுர்த்தி சிலைகள் வெம்பக்கோட்டை அணையிலும் கரைக்கப்பட்டது. இதையொட்டி ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எழுவன் பச்சேரி கிராமத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைப்பாற்றில் கரைக்கப்பட்டது.
வனமூர்த்திலிங்காபுரம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அருகில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது. ஏழாயிரம்பண்ணையில் 2 சிலைகள், சிப்பி பாறை நடுத்தெரு மற்றும் சனீஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள சிலைகளும் ஏழாயிரம் பண்ணை போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நேதாஜி ரோட்டில் பள்ளி வாசல் அருகே ஊர்வலம் வரும் போது அமைதியாக செல்லும் படி போலீசார் கூறினர். இதனை கண்டித்து இந்து முன்னணியினர் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் ஊர்வலம் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை கோனாரி கண்மாயில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. முன்னதாக ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தென் மாநில பொறுப்பாளர் சிவலிங்கம், இந்து முன்னணி விருதுநகர் மாவட்ட தலைவர் யுவராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.