விழுப்புரம்
விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது
|விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,536 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர சிறிய அளவிலான விநாயகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது மற்றும் 5-வது, 7-வது நாட்களில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏரி, குளம், கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
சிலைகள் ஊர்வலம்
அதன்படி விழுப்புரம் நகரில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 3-வது நாளான நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் கரைப்பதற்காக டிராக்டர், மினி லாரி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
மதியம் 2 மணியளவில் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் விழுப்புரம் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல கோவில்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தனித்தனியாக வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களிலும் திருவெண்ணெய்நல்லூர், அரசூர் பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளும் அங்கிருந்து வாகனங்களில் ஊர்வலமாக விழுப்புரம் கொண்டு வரப்பட்டு பின்னர் கடலூருக்கு புறப்பட்டது.
இளைஞர்கள் கொண்டாட்டம்
ஊர்வலமாக சென்ற வாகனங்களுக்கு முன்னால் இளைஞர்கள் ஏராளமானோர் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தில் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
இந்த ஊர்வலம் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மகாத்மாகாந்தி சாலை, காமராஜர் வீதியின் இடதுபுறமாக சென்று மேல்தெரு, வடக்கு தெரு, திரு.வி.க. வீதி வழியாக நேருஜி சாலை வந்து அங்கிருந்து கிழக்கு புதுச்சேரி சாலை வழியாக கடலூருக்கு சென்றது. அப்போது வழிநெடுக பொதுமக்கள் தங்களது வீடுகளில் படைத்த சிறிய அளவிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கடலூருக்கு சென்ற வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செல்வராஜ், பாலமுருகன், ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லக்கூடிய முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,226 சிலைகள் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 6-ந் தேதி ஆகிய நாட்களில் கரைக்கப்படுகிறது.