< Back
மாநில செய்திகள்
விநாயகர் சிலைகளை இன்று காவிரி ஆற்றில் கரைக்க ஏற்பாடு
திருச்சி
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகளை இன்று காவிரி ஆற்றில் கரைக்க ஏற்பாடு

தினத்தந்தி
|
19 Sep 2023 10:29 PM GMT

விநாயகர் சிலைகளை இன்று காவிரி ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சியில் மாநகரில் 290 சிலைகள் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலைக்கு நேற்று முன்தினமும், நேற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் நடைபெற்றது. இந்த விழாக்களில் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அருகே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

ஊர்வலம்

அதன்படி மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் திருச்சி காவிரி ஆற்றில் இன்று(புதன்கிழமை) மாலை கரைக்கப்படுகிறது. இதற்காக இன்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலம் திருச்சி மாநகரில் ஆங்காங்கே நடைபெற உள்ளது. இதையொட்டி மாநகரில் 1,850 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் சிலைகளை கரைப்பதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தின் டிரைவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடைபிடித்து திருச்சி மாநகரில் சீராக போக்குவரத்து இயங்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்