< Back
மாநில செய்திகள்
சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும்விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது :அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும்விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது :அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

தினத்தந்தி
|
14 Sept 2023 12:15 AM IST

சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டார்.


விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கலெக்டர் அலவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, சிலைகள் வைப்பது, அதை ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பது போன்ற பல்வேறு செயல்களுக்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

தடையின்மை சான்று

அதன்படி சிலை அமைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்று பெற முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று சிலை அமைக்க உள்ள இடத்தின் உரிமையாளரிடமிருந்து தடையின்மை சான்று பெறப்படவேண்டும்.

சிலை வைக்க உள்ள இடம் அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலை அல்லது சம்பந்தப்பட்ட துறை மற்றும் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெறப்படவேண்டும். ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறப்பட வேண்டும்.

அதேபோன்று, விநாயகர் சிலைகள் தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது.மேலும் நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத் தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்திட வேண்டும்.

5 நாட்களுக்குள்...

பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்த நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் எடுத்துச்சென்று கரைக்க வேண்டும்.விநாயகர் சிலை கரைப்பதற்கான வாகன ஊர்வலம் காவல் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்ட வழித்தடங்களில் பகல் 12 மணிக்குள் நடத்தப்பட வேண்டும்.முறையாக அனுமதியளிக்கப்பட்ட இடத்தில் கரைக்கப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க செல்லும் ஊர்வலத்தின்போது பிற மதத்தினர் வழிபடும் தலங்களின் அருகில் செல்லும்போது மேள, தாளங்கள் வாசிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

சிலைகளை கோமுகி அணைக்கட்டு, சின்னசேலம் ஏரி, பிரிதிவிமங்கலம் ஏரி, கீரனூர் ஏரி, கூவனூர் குளம், அரகண்டநல்லூர் ஏரி, சங்கராபுரம் ஏரி ஆகிய இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.

விழா குழுவினர் மீது வழக்குப்பதிவு

விநாயகர் சிலைகளை நீரில் கரைத்த 48 மணி நேரத்திற்குள் ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரைகளில் சிலைகளுடன் கொண்டுவரப்பட்ட பொருட்களை உள்ளுர் பஞ்சாயத்து சார்பில் சுத்தம் செய்ய வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விழா குழுவினர் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கோட்டாட்சியர்கள் கள்ளக்குறிச்சி்பவித்ரா, திருக்கோவிலூர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் இணை இயக்குநர் கருணாநிதி மற்றும் அனைத்து உட்கோட்ட துணை சூப்பிரண்டுகள், அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்