திண்டுக்கல்
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
|திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில், பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.
விநாயகர் சிலை பிரதிஷ்டை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி, திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் கடந்த 18-ந்தேதி பொதுமக்கள் சார்பில் 6½ அடி உயர விநாயகர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலை ஊர்வலம் நேற்று நடந்தது.
இதையொட்டி திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் தலைமையில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்பட்டால் கலவரக்காரர்களை விரட்ட வஜ்ரா வாகனமும் அங்கு தயார் நிலையில் இருந்தது.
தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலம்
இதற்கிடையே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரதத்தில், அந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளும் அந்த ரதத்தில் வைக்கப்பட்டு தாரை-தப்பட்டை முழங்க ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தின் போது பஜனை, பக்தி பாடல்களை பாடியபடியே பொதுமக்கள் கோட்டைக்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் சென்றது.
போலீசாருடன் வாக்குவாதம்
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே ஊர்வலம் வந்தபோது, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் பேரில் தாரை, தப்பட்டை இசைக்கக்கூடாது என்று போலீசார் கூறினர். அப்போது ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து இசைக்கருவிகளை இசைப்பவர்களை மட்டும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலை தாண்டி போலீசார் அழைத்து சென்று நிறுத்தினர். அதன்பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.
பஜனை மற்றும் பக்தி பாடல்களை பாடியபடி பேகம்பூர் பெரிய பள்ளிவாசலை விநாயகர் சிலை ஊர்வலம் கடந்து சென்றது. அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர், தங்களை அவதூறாக பேசுவதாக கூறி முஸ்லிம் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
பள்ளிவாசலை ஊர்வலம் தாண்டியதும் மீண்டும் தாரை, தப்பட்டை இசைக்கப்பட்டது. அதன்பிறகு யானைத்தெப்பம், தீயணைப்பு நிலையம் வழியாக கோட்டைக்குளத்துக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு கரைக்கப்பட்டன.