திருவண்ணாமலை
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
|திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இந்து அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் குழு சார்பில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
அதேபோல் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து 3-வது நாளான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் மொத்தமாகவும், தனித் தனியாகவும் ஊர்வலமாக கொண்டு சென்று குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தனர்.
திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் மொத்தமாவும், தனித்தனியாகவும் தாரை தப்பட்டைகள் அடித்து இளைஞர்கள் ஆடி, பாடி ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைத்தனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள காந்தி சிலை அருகில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நகரின் முக்கிய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆயுதம் ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக காந்தி சிலை எதிரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நகர தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய சிந்தனை கழக மாநில அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் காந்தி சிலை அருகில் தொடங்கி அருணாசலேஸ்வரர் கோவில் வழியாக, கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு வழியாக தாமரை குளத்திற்கு சென்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு கோஷ்டி மோதல் காரணமாக சமுத்திரம் காலனி அருகில் செல்லும்போது விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது.
அதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை போலீசார் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர். தாமரை குளத்தில் திருவண்ணாமலை நகரை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டது.
பொதுமக்களும் தங்கள் வீடுகளில் வழிபாட்டில் வைத்திருந்த களிமண் விநாயகர் சிலைகளை கற்பூரம் ஏற்றி வழிபட்டு குளத்தில் கரைத்தனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
வாணாபுரம்
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
வழிபாடு நடத்திய சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக பொதுமக்கள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர்.
போளூர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போளூர் நகரில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடந்தது. 3-ம் நாளான இன்று எல்லா இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றன.
பெரிய ஏரி, கூர் ஏரி, மோட்லூர் ஏரி ஆகிய 3 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நடந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். மேலும் போளூரை சுற்றியுள்ள சில கிராமங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.