திருவண்ணாமலை
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
|வந்தவாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.
வந்தவாசி
வந்தவாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வந்தவாசி நகரில் பல்வேறு இடங்களில் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கரைப்பதற்காக இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் ஆர்.சீனிவாசன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் உபாசகர் லட்சுமணன் சுவாமிகள், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மச்சேந்திரன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
வந்தவாசி அங்காளம்மன் கோவில் அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சன்னதி தெரு, தேரடி, பஜார்வீதி வழியாக பழைய பஸ் நிலையம் எதிரில் சென்றடைந்தது.
குளத்தில் கரைப்பு
அங்கு நடந்த கூட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர்கள் ராமநாதன், பாமாபதி, நகர பொது செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் எ.டி.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் கோட்டைமூலை, அச்சிரப்பாக்கம் சாலை வழியாக பூமாதுசெட்டிக்குளம் சென்றடைந்தது.
அந்த குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை ஒட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், 2 டிரோன் கேமராக்கள் மூலமும் ஊர்வலப் பாதை கண்காணிக்கப்பட்டது.