< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
3 Sep 2022 2:11 PM GMT

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிவசேனா சார்பில் திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக நகரில் 12 இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள், திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு இருந்து மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.

இதற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் தன்விக் அர்ஜூன் தலைமை தாங்கினார். இதில் சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி, மாநில செயலாளர் அசோக்பாபு, இளைஞர் அணி தலைவர் திருமுருகதினேஷ், மாநில செயலாளர்கள் தமிழ்செல்வன், குரு அய்யப்பன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஏ.எம்.சி. சாலை, மணிக்கூண்டு, மெயின்ரோடு, கடைவீதி, மார்க்கெட் வழியாக கோட்டைகுளத்தை சென்றடைந்தது. அங்கு பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடகனாற்றில் கரைப்பு

இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் வேடசந்தூரில் நடைபெற்றது. இதனையடுத்து நகரம் மற்றும் கிராமப்பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் வேடசந்தூர் ஆர்.எச்.காலனி விநாயகர் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது.

இதற்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வடமதுரை சாலை, சாலைத்தெரு, கடைவீதி, பஸ் நிலையம், குடகனாறு பாலம், ஆத்துமேட்டுக்கு சிலைகள் வந்தடைந்தன. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

இதனையடுத்து அங்கிருந்து தொடங்கிய ஊர்வலம் மார்க்கெட் சாலை, சந்தைப்பேட்டை, போலீஸ் காலனி வழியாக குடகனாற்றை சென்றடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சத்தியபிரபா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கன்னிவாடி, பழனி

கன்னிவாடியில், இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் முத்துசாமி வரவேற்றார். பின்னர் கன்னிவாடியில் இருந்து நவாப்பட்டி, மணியக்காரன்பட்டி, புதுப்பட்டி வழியே ஊர்வலமாக சிலைகள் எடுத்து செல்லப்பட்டு ஆலத்தூரான்பட்டி மச்சக்குளத்தில் கரைக்கப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பழனியில் நடைபெற்றது. இந்து வியாபாரி சங்க மாநில செயலாளர் ஜெகன், இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பாத விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் வழியாக சண்முகநதி கொண்டு சென்று கரைக்கப்பட்டது.ஊர்வலத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்