தென்காசி
செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்- மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்
|செங்கோட்டையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்
செங்கோட்டை:
செங்கோட்டையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகரின் முக்கிய இடங்களில் சுமார் 34-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக நேற்று வழிபாடு செய்யப்பட்ட அனைத்து விநாயகா் சிலைகளும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள், வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குண்டாற்றில் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் செங்கோட்டை ஸ்ரீவண்டிமலச்சி அம்மன் கோவில் முன்புள்ள ஓம்காளி திடலில் வைத்து நடந்த விஜர்சன ஊர்வல தொடக்க நிகழ்ச்சிக்கு விழா கமிட்டி தலைவா் மணிகண்டன் தலைமை தாங்கினார். கமிட்டி ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், இணைச்செயலாளா் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொருளாளா் காளி அனைவரையும் வரவேற்று பேசினார். அகில பாரத சன்னியாசிகள் சங்க மாநில இணைச்செயலாளா் சுவாமி ராகவானந்தா, விஷ்வஹிந்து பரிஷத் மாநிலத்தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கதிர்வேலு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமார், விஷ்வஹிந்த் பரிஷத் கோவில் திருமடங்கள் தென்பாரத அமைப்பாளா் சரவண கார்த்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினா்.
மத்திய மந்திரி முருகன்
சிறப்பு அழைப்பாளராக மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு விநாயகா் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
ஊர்வலம் வண்டிமலச்சியம்மன் கோவில் முன்பிலிருந்து புறப்பட்டு கேசி ரோடு, வம்பளந்தான் முக்கு, வல்லம் ரோடு, செல்வவிநாயகா் கோவில் தெரு, எஸ்.ஆர்.கே. தெரு, வழியாக சென்று தாலுகா அலுவலகம் ரோடு, மேலூர் முத்தழகி அம்மன் கோவில் தெரு, பம்பு ஹவுஸ் ரோடு. சேர்வைகாரன் புதுத்தெரு, காசுக்கடை பஜார், கீழபஜார் வழியாக வந்து குண்டாற்றில் விநாயகா் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு- பள்ளிகளுக்கு விடுமுறை
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த விநாயகா் ஊர்வலத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
விநாயகா் சதுா்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காவல்துறை, பொதுமக்கள் நலன் கருதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாவட்ட கல்வி அதிகாரி அறிவுரையின் பேரில் செங்கோட்டை நகரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் மதியம் விடுமுறை விடப்பட்டது.
டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. நகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.