சேலம்
விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
|சேலம் மாவட்டத்தில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதையடுத்து விநாயகர் சதுர்த்தி தினமான கடந்த 31-ந் தேதி மாலை முதலே தங்கள் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் விழா ஏற்பாட்டாளர்கள் கரைத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மேட்டூர் காவிரி ஆற்றில் தான் பிரதானமாக கரைத்து வருகின்றனர்.
தம்மம்பட்டியில் ஊர்வலம்
இந்த நிலையில் தம்மம்பட்டி பகுதியில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, 29 விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தனர். இதைத்தொடர்ந்து விநாயகர் சிலையை வைத்தவர்களே அந்தந்த சிலைகளை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தம்மம்பட்டி, உடையார்பாளையம், காந்தி நகர், கடைவீதி, நடுவீதி, கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை ஆட்டோ மற்றும் டிராக்டர்களில் உடையார்பாளையம் பகுதியில் இருந்து ஒன்றின் பின் ஒன்றாக ஊர்வலமாக ஜங்கமசமுத்திரம் தடுப்பணைக்கு எடுத்து வரப்பட்டன.
வரும் வழியில் பஸ் நிலையம் முன்புறம் விநாயகர் சிலையை ஏற்றி வந்த வாகனத்தில் நின்றபடி விழாக்குழுவினர் விநாயகர் சதுர்த்தி தின விழாவை பற்றி பேசினார்கள். அப்போது வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட விநாயகர் சிலைக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிலைகள் கரைப்பு
அதன் பிறகு கடைவீதி, நடுவீதி வழியாக பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஜங்கமசமுத்திரம் தடுப்பணை பகுதிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டன. அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதன்பின்பு ஒன்றன்பின் ஒன்றாக தடுப்பணையில் விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் இறக்கப்பட்டு கரைக்கப்பட்டன.
தம்மம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் வஜ்ரா வாகனங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தேவூர்
இதேபோல் சேலம், எடப்பாடி, சென்றாயனூர், வெள்ளாண்டிவலசு, மகுடஞ்சாவடி, கொண்டலாம்பட்டி, இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக தேவூர் கிழக்கு கரை கால்வாய் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
மேளதாளத்துடன் முகத்தில் பல்வேறு வண்ண சாயங்கள் பூசிக்கொண்டு பக்தர்கள் உற்சாகமாக விநாயகர் சிலைகளை அங்கு கொண்டு வந்தனர். கிழக்கு கரையில் சிறப்பு பூஜை செய்த பக்தர்கள் நீர்நிலையில் விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதேபோல் மேட்டூரிலும் நேற்று சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓணம்பாறை
இதேபோல் பூலாம்பட்டி-சேலம் உருக்காலை பிரதான சாலையில் உள்ள ஓணம்பாறை பகுதியில் காவிரி கிழக்குக்கரை கால்வாயில் திரளான பக்தர்கள் புனித நீராடி விநாயகர் சிலைகளை கரைத்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததை அடுத்து அப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.