செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
|செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 300 விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் நேற்று அனுமதி வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு, மறைமலை நகர், ஊரப்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், மலாலிநத்தம், நெம்மேலி, படாளம், மானாமதி, திருக்கழுக்குன்றம், ஆலப்பாக்கம், வெங்கப்பாக்கம். எச்சூர், குழிப்பாந்தண்டம், காரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, கிராப்புற இளைஞர்கள் குழுவினர் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் ஏற்றி மேளதாளத்துடன், ஆடல் பாடல் என உற்சாகத்துடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
கடலில் கரைப்பு
மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் சிலை கரைப்பு பணியை தொடங்கி வைத்தனர். பின்னர் நீச்சல் தெரிந்த மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி பகுதி மீனவ இளைஞர்கள் ஒவ்வொரு சிலையாக தூக்கி சென்று கடலில் கரைத்தனர்.
கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளும் நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. சிலை கரைப்பு நிகழ்ச்சியில் மாமல்லபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் விஜய், கருப்பசாமி, திராவிடமணி, நல்லசிங்கம், இந்து நகர முன்னணி நிர்வாகிகள் எம்.பாபு, என்.கே.சிவா, எம்.வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் சிலை கரைக்க வந்த பக்தர்கள் 1,000 பேருக்கு மாமல்லபுரம் வியாபாரிகள் உணவு, பழரசம், குடிநீர் பாட்டில் வழங்கி உபசரித்தனர்.
பாலவாக்கம் கடலில்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஊரப்பாக்கம், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், காயரம்பேடு, பொத்தேரி, தைலாவரம், மாடம்பாக்கம், குத்தனூர், காவனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று 51 சிலைகள் வைத்து வழிபட்டு வந்தனர்.
நேற்று மதியம் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 51 விநாயகர் சிலைகள் நந்திவரம் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் பாலவாக்கம் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி செந்தில் குமார், பா.ஜ.க. மூத்த நிர்வாகி சுகுமார், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.