< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் 288 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

தினத்தந்தி
|
18 Sept 2023 1:31 AM IST

மாவட்டத்தில் 288 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

288 இடங்களில் விநாயகர் சிலைகள்

சதுா்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 288 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அதாவது விருதுநகர் கோட்டத்தில் 53 இடங்களிலும், சிவகாசியில் 63 இடங்களிலும், அருப்புக்கோட்டையில் 34 இடங்களிலும், ராஜபாளையத்தில் 38 இடங்களிலும், சாத்தூரில் 39 இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 46 இடங்களிலும், திருச்சுழியில் 15 இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு வழிபாடு நடத்துகின்றனர்.

சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் சுழற்சி முறையில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் நேற்று மாலை பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதியில் அதிக அளவில் திரண்டனர். இதனால் சிவகாசி சிவன் கோவில் மற்றும் ரத வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போதிய போலீசார் இல்லாததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு தெருக்களில் இருந்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

ஏழாயிரம்பண்ணை

ஏழாயிரம்பண்ணை பகுதியில் 3 விநாயகர் சிலைகள், பாண்டியாபுரம், ஆர்.மடத்துப்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, சிப்பிப்பாறை, கோட்டைப்பட்டி, தூங்கா ரெட்டியபட்டி, சோலைபட்டி, கோவில்செல்லையாபுரம், சங்கரபாண்டியாபுரம், ஆகிய 12 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளுக்கு ஏழாயிரம் பண்ணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, பச்சையாபுரம், வனமூர்த்தி லிங்கபுரம், சத்திரப்பட்டி, சல்வார்பட்டி, மீனாட்சிபுரம், விஜய கரிசல்குளம், கொட்டமடக்கிபட்டி, வெற்றிலையூரணி உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு வெம்பக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் வருகிற 20-ந் தேதி ஊருணிகளில் கரைக்கப்படுகிறது.

பூக்கள் விற்பனை

அருப்புக்கோட்டை பூ மார்க்ெகட்டில் நேற்று காலை மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை ஆனது. ேநரம் ஆக, ஆக கிலோ ரூ.800-க்கு விற்றது. அதேபோல முல்ைல பூக்கள், கனகாம்பரம் பூக்களும் கிலோ ரூ.600-க்கு விற்பனை ஆனது. மதியத்திற்கு பிறகு அருப்புக்கோட்டை பூ மார்க்ெகட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. விற்பனையும் மந்தமானது.

அதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள பூக்கடைகள், பூஜை பொருட்கள், விநாயகர் சிலைகள் வாங்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அருகம்புல்

விருதுநகர் மார்க்கெட்டில் வழக்கமாக அருகம்புல் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படும். நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. சதுர்த்தி என்பதால் அருகம்புல் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அதேபோல அருகம்புல் மாலை ரூ.30 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்