அரியலூர்
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைப்பு
|மாவட்டங்களில் சதுர்த்தியன்று வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
3 நாட்கள் சிறப்பு வழிபாடு
பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதே போல் மாவட்டத்தில் பெரம்பலூர் புறநகர் பகுதி மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகாக்களில் பல்வேறு பகுதிகளில் போலீசார் அனுமதியுடன் மொத்தம் 212 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளா் செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பா.ம.க. மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்தியசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்து முன்னணியினர், விநாயகர் பக்தர்கள், இந்து இயக்கங்களின் நிர்வாகிகள், விநாயகர் ஊர்வல கமிட்டி நிர்வாகிகள், இளைஞர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது
ஊர்வலம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் புறப்பட்டு காமராஜர் வளைவு, வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது. இதில் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு தில்லை நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக ஆசியா நகரில் சென்ற போது இளைஞர்கள் பட்டாசு வெடித்த போது அருகே இருந்த ஒரு கீற்றுக்கொட்டகையில் தீப்பிடித்தது. இதனை கண்ட விழாக்குழுவினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி கொட்டகையில் பிடித்த தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதன் பிறகு திருச்சிக்கு சரக்கு வாகனங்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை ஒட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சதுர்த்தியன்றும், நேற்று முன்தினம், நேற்றும் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களிலேயே கரைக்கப்பட்டன. அதில் சில சிலைகள் திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
ஊர்வலம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 18 விநாயகர் சிலைகள் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் இருந்து தா.பழூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மேற்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன் வரவேற்று பேசினார். இந்து முன்னணி திருச்சி கோட்ட செயலாளர்கள் குணா, ராஜசேகர், ஓ.பி.சி. அணி தலைவர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. அரியலூர் மாவட்ட செயலாளர் இளையராஜா விநாயகர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தா.பழூர் பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்து பேசினார். மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றின் மையப் பகுதியில் சிலை கரைப்பதற்காக போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர். மதனத்தூர் போலீஸ் சோதனை சாவடி வழியாக சென்ற விநாயகர் ஊர்வலம் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஒவ்வொரு சிலையாக எடுத்துச் செல்லப்பட்டு சிலை கரைக்கும் இடத்தில் ஆற்றில் கரைக்கப்பட்டது.
தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்
அரியலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அந்தோணி ஆரி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் விநாயகர் ஊர்வலத்திற்கும், சிலை கரைக்கும் பணிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுவலர் அலுவலர் பூபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சிலை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர். தா.பழூர் வருவாய் ஆய்வாளர்கள் தமிழரசன், வேணுகோபால் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினர் மேற்பார்வையிட்டு சிலை கரைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். சிலை கரைக்கும் இடத்தில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் இந்து முன்னணி சார்பில் 18 விநாயகர் சிலைகளும், பல்வேறு கிராமங்களில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 19 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
இதேபோல் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம், மீன்சுருட்டி மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டன. இதில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் ஆற்றில் கரைக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில், மீன்சுருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.