< Back
மாநில செய்திகள்
விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
கரூர்
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

தினத்தந்தி
|
20 Sept 2023 12:00 AM IST

கரூர்-நொய்யல் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. பின்னர் ஊர்வலம் தொடங்கும் இடமான 80 அடி சாலையில் வாகனங்களில் விநாயகர் சிலைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

சிலைகள் கரைப்பு

பின்னர் 80 அடி சாலையில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலமானது கரூர்-கோவை சாலை, ஜவகர்பஜார், 5 ரோடு, அரசு காலனி வழியாக சென்று வாங்கல் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டன.

கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமானது மதியம் 3 மணி அளவிலும், இரவு 7 மணியளவிலும் என இருமுறை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணியினர், இந்து அமைப்பினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நொய்யல்

நொய்யல், பாலத்துறை, புகழிமலை, புன்னம்சத்திரம், கந்தம்பாளையம், மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், கரைப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று அனைத்து சிலைகளும் அந்ததந்த பகுதிகளில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தவுட்டுபாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

இதையொட்டி அந்த பகுதியில் அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்