திருப்பத்தூர்
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் பூந்தி, பேரிச்சம் பழம் படைத்த முஸ்லிம்கள்
|திருப்பத்தூரில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது முஸ்லிம்கள் பூந்தி மற்றும் பேரிச்சம்பழம் படைத்து, இனிப்பு வழங்கினர்.
திருப்பத்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது முஸ்லிம்கள் பூந்தி மற்றும் பேரிச்சம்பழம் படைத்து, இனிப்பு வழங்கினர்.
விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 31-ந் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 680-க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.
திருப்பத்தூரில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாணியம்பாடி மெயின் ரோடு பிள்ளையார் கோவில் அருகில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் வி.அன்பழகன், நகரத் தலைவர் ஆர்.சண்முகம் ஆகியோர் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி. மூர்த்தி, பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கொடி அசைத்து அசைத்து தொடங்கி வைத்தனர். வீட்டில் படைக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை பெண்கள் தலையில் சுமந்து ஆடியபடி ஊர்வலத்திற்கு முன்பாக சென்றனர்.
மேளதாளத்துடன்
தாரை தப்பட்டை, பம்பையுடன் விநாயகர் சிலை ஊர்வலம் வாணியம்பாடி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, தண்டபாணி கோவில் தெரு, கோட்டை தெரு, சிவன் கோவில், நகைக்கடை தெரு, ஆலங்காயம் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக ஹவுசிங் போர்டு சென்றடைந்தது. அங்கிருந்து இரும்புத்தூர் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டது.
ஊர்வலம் சிவன் கோவிலுக்கு கோட்டை தெரு, ஆலமரம் முஸ்லிம் தெரு வழியாக செல்ல வேண்டும். இந்த வழியாக ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி தரவில்லை. அதனால் தண்டபாணி கோவில் தெருவில் சிலைகள் நிறுத்திவைக்கப்பட்டது. மதிய உணவுக்கு பிறகு விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து மேளதாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது.
பூந்தி, பேரிச்சம் பழம் படைப்பு
சிவன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்ட உடன் அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் விநாயகருக்கு பூஜை செய்தவுடன் பூந்தி, பேரிச்சம் பழத்தை விநாயகருக்கு படைத்து, போலீசார் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். அவர்களுக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை, பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர்கள், துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வழிநெடுகிலும் டிரோன் கேமரா மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ கேமராக்கள் மூலமும், போலீசார் நவீன சிறிய கேமராக்கள் தங்கள் உடலில் மாட்டியும் கண்காணிப்பு செய்யப்பட்டது.
ஊர்வலத்தையொட்டி டவுன் போலீஸ் ஸ்டேஷன் கூட்ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக செல்லும் பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு இருந்தது.