< Back
மாநில செய்திகள்
விநாயகர் சிலை ஊர்வலம்: திருப்பூரில் நாளை போக்குவரத்து மாற்றம்
மாநில செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலம்: திருப்பூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
9 Sept 2024 7:05 PM IST

போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை (செவ்வாய்க்கிழமை) மாநகரப் பகுதிக்குள் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவினாசி சாலை பழைய வடக்கு வட்டார போக்குவரத்து சந்திப்பு மற்றும் 60 அடி ரோட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். 60 அடி ரோடு தற்காலிக பஸ் நிலையமாக செயல்படும்.

பெருமாநல்லூரிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பஸ் நிலையமாக செயல்படும்.

பழைய பஸ் நிலையத்திலிருந்து பெருமாநல்லூர் செல்லும் பஸ் மற்றும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அவினாசி சாலை வழியாக திருமுருகன் பூண்டியிலிருந்து பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்லும். பெருமாநல்லூரிலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பூலுவப்பட்டி, நெரிப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பஸ் நிலையத்தை சென்றடையும். அவினாசியிலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெரிப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பஸ் நிலையத்தை சென்றடையும்.

பழைய பஸ் நிலையத்திலிருந்து அவினாசி மற்றும் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் மதியம் 4 மணி முதல் இரவு 8 மணி வரை ராஜீவ் நகர் சிக்னல், செல்லாண்டிஅம்மன் துறை, மின்மயானம், ஊத்துக்குளி ரோடு தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவினாசி ரோடு வழியாக செல்லும். காங்கயம் ரோடு, நல்லூரிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் முத்தனம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு வழியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும்.

பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி வழியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும். பல்லடம் சாலையிலிருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு வழியாக நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவினாசி செல்லலாம்.

மங்கலம் சாலையிலிருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியாண்டிபாளையம், முருகம்பாளையம், வித்யாலயம், வீரபாண்டி பிரிவு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும். மங்கலம் சாலையிலிருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அணைப்பாளையம் பிரிவு, அணைப்பாளையம், சிறுபூலுவபட்டி வழியாக அவினாசி செல்லலாம்.

தாராபுரம் சாலையிலிருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் அனைத்தும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அமராவதிபாளையம் காங்கயம் ரோடு வழியாக நல்லூர், காசிபாளையம் சோதனைச்சாவடி கூலிபாளையம் நால்ரோடு பூண்டி ரிங் ரோடு வழியாக அவினாசி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாநகர காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்