விநாயகர் சதுர்த்தி விழா: மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..!
|தமிழகத்தில் பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை,
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. 2 ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமான முறையில் கொண்டாடப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து 1800 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பிச்சி பூ 800 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 1000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்து, பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை உயர்ந்தாலும்,பூக்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.