அரியலூர்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
|அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி
உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் சுமார் 314 சிலைகள் வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அரியலூர் நகரில் பெரிய அரண்மனைத்தெரு, மங்காய் பிள்ளையார் தெரு, சின்னக்கடை வீதி, மின் நகர் உள்ளிட்ட 15 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அரியலூர் பெரிய அரண்மனை தெருவில் சக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 13 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அன்னப்பறவை மீது அமர்ந்திருந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை சிறப்பு யாகம் நடத்தி பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
இதேபோல் விளாங்கர தெரு மங்காய் பிள்ளையார், பட்டு நூல் கார தெரு விநாயகர், ஒப்பில்லாத அம்மன் கோவில் தேரடி விநாயகர், அரசு நிலையிட்டான் விநாயகர், மற்றும் நகரில் உள்ள பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது விநாயகருக்கு கொழுக்கட்டை, பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு அபிஷேகம்
மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள கணக்க விநாயகர் கோவிலில் விநாயகர்சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கணக்க விநாயகருக்கு, மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் திரவியங்களால் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் கொழுக்கட்டை, அருகம்புல், வெற்றிலை மற்றும் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டது. கணக்க விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.மாலையில் சந்தன காப்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர். இதேபோல் தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, கீழப்பழுவூர், வி.கைகாட்டி உடையார்பாளையம், உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.