< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
31 Aug 2022 10:27 PM IST

கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கரூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகவிநாயகர் கோவிலில் விநாயாகருக்கு பால், பழம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.இதேபோல, கரூர், சின்ன ஆண்டாங்கோவிலில் உள்ள விநாயகர் கோவிலிலும் விநாயகப்பெருமானுக்கு யாகம் நடத்தப்பட்டது.

10 அடி விநாயகர் சிலை

இதே போல, கரூர், பசுபதீஸ்வரர் கோவில் முன்பும் 10 அடி விநாயகர் சிலையை மேடையில் வைத்து விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணி முதல் பஜனை, பரதநாட்டியம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இதேபோல, கரூர் மினி பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.இதேபோல், விநாயகா் சதுர்த்தி விழாவையொட்டி வீடுகளில் விநாயகருக்கு பொரி, பழங்கள், அவல் பொரி, பழங்கள் படைத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

வெள்ளியணை

வெள்ளியணை கடைவீதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திரளான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். வெள்ளியணை வடக்கு ராஜா தெரு, கருப்பூர் ஆகிய பகுதியிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யபட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். ஜெகதாபி, பொரணி, மணவாடி, தாளியாபட்டி, கே பிச்சம்பட்டி, வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்பகுதி குக்கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களிலும் ஒலிப்பெருக்கி அமைத்து பக்திபாடல்களை ஒலிபரப்பி, பொங்கல் வைத்து, சுண்டல், கொழுக்கட்டை. படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.

தோகைமலை

தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகளில் 6-க்கு மேற்பட்ட பொது இடங்களில் 2 அடி முதல் 6 அடி வரை விநாயகர் சிலை வைத்து பூமாலையும், கொழுக்கட்டை வைத்தும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் அனைத்து வீடுகளிலும் விநாயகருக்கு சிறப்பு பூைஜ செய்து வழிபட்டனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் மலைவீதி, புகழிமலை, காந்திநகர், முல்லை நகர் உள்பட 30 இடங்களில் 8 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து சிலைகளும் புகழிமலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

அரவக்குறிச்சி

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரவக்குறிச்சி பகுதியில் இந்து முன்னணி சார்பில் பள்ளப்பட்டி ரங்கராஜ் நகர் மேற்கு, அண்ணா நகர், இனுங்கனூர், போதூர், அரவக்குறிச்சி ஜீவா நகர், ராஜபுரம் மேற்கு, சீத்தப்பட்டி, கஞ்சமாரம்பட்டி ஆகிய 8 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பொதுமக்கள் சென்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இந்த விநாயகர் சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்