< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
19 Sept 2023 12:15 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை,செப்.19-

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்த நாள், ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டை அடுத்துள்ள சதுர்வேதிமங்களம் கிராமத்தில் உள்ள அபிராமி உடனான கிருபாலநாதர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கனி பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு, மூன்று கால பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து யாக குண்டம் அமைத்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்களால் புனிதநீர் கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து பம்பை, மேளதாளம் முழங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், இந்து தர்ம சேனா மாநில இயக்குனர் ராஜயோகி ராஜசிவம் சுவாமிகள் விழா ஏற்பாடுகளை செய்தார்.

செல்லப் பிள்ளையார் கோவில்

இதேபோல் மயூரநாதர் மேலவீதியில் உள்ள செல்லப் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் செல்லப்பிள்ளையாருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தன. மேலும் விழாவில் கொழுக்கட்டைகள் வைத்து படையல் இடப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜைகளை கோதண்ட ராமன் குருக்கள் மேற்கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை செல்லபிள்ளையார் கோவில் வழிபாட்டு மன்ற தலைவர் மயிலாடுதுறை கவிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திருவெண்காடு, பூம்புகார்

திருவெண்காடு சாலை வீதியில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோவில் விநாயகருக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவசம், மலர் மாலைகள் மற்றும் அருகம்புல் மாலை அர்ச்சனைகள் நடந்தன. பின்னர் கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதே போல் திருநகரி கிராமத்தில் கோவில் கொண்டுள்ள செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் பல்லவனம் பல்லவனநாதர் கோவில், சித்தன் காத்திருப்பு, நாங்கூர், ராஜா நாராயண பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் தெரு, கரு விழுந்த நாதபுரம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குரங்கு புத்தூர் என்ற இடத்தில் விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி விநாயகரை வழிபட்டனர்.

140-க்கும் மேற்பட்ட இடங்களில்....

மயிலாடுதுறை மாவட்டத்தில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மயிலாடுதுறையில் சின்னக்கடைவீதி சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூங்கில்தோட்டம் கிராமத்தில் ரெயிலடித்தெரு விநாயகர் கோவிலில் மந்திர ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் செய்யப்பட்டு ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, புனித நீர் கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 108 சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கொண்டு விநாயகர் அபிஷேக ஆராதனை மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பாரத்குருக்கள், சந்திரசேகரன் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர். இதேபோல் மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மங்கள விநாயகர் கோவிலில் சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு 108 சிதறு தேங்காய்கள் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்