புதுக்கோட்டை
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாட்டம்
|விநாயகா் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாத முதல் தேதியில் இந்த சதுர்த்தி நட்சத்திரம் வருகிறது.
அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்படும். ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவார்கள். மேலும் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்வார்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிந்த பின் 3 நாட்களுக்கு பிறகு நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது உண்டு.
சிலைகள் விற்பனை மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் சாலையோரம் ஆங்காங்கே விநாயகர் சிலைகளும், கடை வீதிகளிலும் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவு முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் மற்றும் உயரத்தின் அளவுக்கேற்ப விலைகளிலும் சிலைகள் விற்பனையாகிறது.
இதேபோல மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே புதுக்கோட்டை நகரில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.