< Back
மாநில செய்திகள்
கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கணேச ரதம் ரசாயன கலவையால் சுத்தப்படுத்தும் பணி தொடக்கம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கணேச ரதம் ரசாயன கலவையால் சுத்தப்படுத்தும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
2 Dec 2022 6:07 PM IST

கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கணேச ரதம் ரசாயன கலவை கலந்த தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. இங்கு பல்லவ மன்னர்களின் கலைத்திறனால் உருவாக்கப்பட்ட கற்சிற்பங்கள், ஒற்றைக்கல் ரதங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. மேலும் மாமல்லபுரம் என்றதும் அனைவருடைய நினைவுக்கும் வருவது அங்குள்ள கணேச ரதம் ஆகும். இது பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுசின்னங்களில் இளஞ்சிவப்பு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள 10 ரதங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த கணேச ரதத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலக பாரம்பரிய சின்னம் என 1984-ம் ஆண்டு அறிவித்தது. இந்த கணேச ரதம் ஒற்றைக்கல் ரதம் என்பது இந்திய கல்வெட்டு கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.

இந்த கணேச ரதம் 7-ம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மற்றும் அவரது மகன் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். இந்த ரதக்கோவிலில் பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இவை பல்லவர்கள் ஆட்சி காலத்தில் வாதாபியில் இருந்து கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டதாகும்.

இந்த நிலையில் மாமல்லபுரம் நகரம், கடற்கரை ஓரம் உள்ள நகரப்பகுதியாக திகழ்கிறது. காற்று மாசு ஏற்படுவதால் உப்புக்காற்றால் கணேச ரதத்தில் துகள்கள் படிந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசும்போது காற்றின் மூலம் உப்புத்துகள்கள் கணேச ரதம் முழுவதும் பரவி கோவிலை பாதிப்படைய செய்கிறது. அதேபோல் பறவை எச்சங்கள் மூலமாகவும் ஒருபுறம் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை கலந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்து உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் பிரிவு வல்லுநர்கள் தற்போது இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த பணியை மேற்கொள்ள வசதியாக சவுக்கு கம்புகளால் கணேச ரதத்தில் சாரம் அமைக்கப்பட்டு, அதன் மீது ஏறி இந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கணேச ரதத்தில் படிந்துள்ள அசுத்தங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

உப்பு படிமங்கள் படிந்திருக்கும் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக 10 நாட்கள் வரை ரசாயனம் கலந்த தண்ணீரால் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெறும் என தெரிகிறது. ரசாயன கலவை கலந்த தண்ணீரால் சுத்தம் செய்யும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு கணேச ரதத்தை கண்டுகளிக்க எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் அவர்கள் வழக்கம் போல் கணேச ரதத்தை கண்டுகளித்து விட்டு செல்லலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்