திருநெல்வேலி
காந்தி ஜெயந்தி விழா
|கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியடிகள் வழியில் அகிம்சை பாதையை பின்பற்றி இன்றைய இளைஞர்களை சமூகத்தில் நல்வழிபடுத்துதல் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். தன்னார்வ தொண்டர் பிரியங்கா வரவேற்றார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியன், சுசிலா ஆகியோர் கருத்துரை வழங்கினர். தன்னார்வ தொண்டர் மாதவி நன்றி கூறினார். கருத்தரங்கில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம் அமைப்பினரும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து அம்பையில் கண்சிகிச்சை முகாம் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். அவர்களில் 38 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பணகுடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு மெயின் ரோடு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்துக்கு மாநில காங்கிரஸ் செயலாளர் ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வீரவநல்லூர் நகர காங்கிரஸ் சார்பாக அரிகேசவநல்லூர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், மாவட்ட பொதுச்செயலாளர் சிதம்பரம், வட்டார தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அம்பை சர்வோதயா சங்கம் வீரவநல்லூர் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் சங்க செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் பாபநாசம், பொருளாளர் சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு பேரூராட்சி தலைவர் ஜெயந்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை தலைவர் வசந்த சந்திரா, கவுன்சிலர் சிதம்பரம், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.