தூத்துக்குடி
தூத்துக்குடி துறைமுகத்தில் காந்தி ஜெயந்தி விழா
|தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி 200 தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. துறைமுக ஆணையத் தலைவர் (பொறுப்பு) பிமல் குமார் ஜா தலைமையில் அனைத்து துறை தலைவர்களும் மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில், தூய்மை இந்தியா சிறப்பு விழிப்புணர்வு 3.0 திட்டத்தின் கீழ் வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் பிமல் குமார் ஜா, தலைமை பொறியாளர் கே.ரவிக்குமார் மற்றும் துறைமுக மூத்த அதிகாரிகள் முன்னிலையில் துறைமுகத்தில் பணியாற்றும் துய்மை பணியாளர்கள் சுமார் 200 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் துறைமுக ஆணையத் தலைவர் பிமல் குமார் ஜா பேசும் போது, நாட்டின் தூய்மையான துறைமுகங்களில் வ.உ.சி துறைமுகமும் ஒன்றாக திகழ்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். நாம் அனைவரும் நமது வாழ்வில் தூய்மையை கடைப்பிடித்தலை கோட்பாடாக பின்பற்ற வேண்டும். துறைமுகம் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதன் மூலம் சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், சுற்றுப்புற சூழல் விதிகளுக்கு உட்படுதல், பாதுகாப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் மட்டுமல்லாமல் துறைமுகத்தில் சரக்கு கையாளுவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும்.
மேலும், வ.உ.சி துறைமுக ஆணையம் சார்பில் குப்பைகளை அகற்றுதல், அனைத்து சுற்றுப்புற இடங்களையும் புதுப்பித்தல், நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல், நெகிழிக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், துறைமுக பள்ளிகளில் தூய்மை இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக கழிவுகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பித்தல், துறைமுக சுற்றுப்புற பகுதிகளான மருத்துவமனை, துறைமுக குடியிருப்பு பகுதி, ரெயில் பாதைகள் மற்றும் சரக்கு கையாளும் கப்பல் தளங்களை சுத்தம் செய்தல், நாட்டின் சுற்றுப்புற சுகாதாரப் பயணத்தை மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்சிகளை இந்த மாதம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறினார். விழாவில் துறைமுக அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.