< Back
மாநில செய்திகள்
சென்னை மயிலாப்பூர், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
மாநில செய்திகள்

சென்னை மயிலாப்பூர், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

தினத்தந்தி
|
26 Oct 2022 4:24 AM IST

சென்னை மயிலாப்பூர், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் விழா நடக்கிறது. முக்கிய திருநாளான சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி அளவில் நடக்கிறது.

விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர்.

வடபழனி முருகன் கோவில்

வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி விழா, லட்சார்ச்சனையுடன் நேற்று தொடங்கியது. இரவு 9 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் இன்று (புதன்கிழமை) இரவு சந்திர பிரபை வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை)ஆட்டுக்கிடா வாகனம், 28-ந்தேதி நாக வாகனம், 29-ந்தேதி மங்களகிரி விமானத்திலும் பாலசுப்பிரமணி சுவாமி புறப்பாடு நடக்கிறது.

முக்கிய திருவிழாவான சூரசம்ஹாரம் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. 31-ந்தேதி திருக்கல்யாணத்துடன் 6 நாட்கள் நடக்கும் கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது.

நவம்பர் 1-ந்தேதி வடபழனி ஆண்டவர் மங்களகிரி விமானத்தில் புறப்பாடும், 2-ந்தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடும், 3-ந்தேதி வடபழனி முருகன் புறப்பாடும், 4-ந்தேதி அருணகிரிநாதர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

குன்றத்தூர், சிறுவாபுரி...

இதுதவிர, சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா தொடங்கி உள்ளது. திரளான பக்தர்கள் விரதம் இருந்து பூஜைகளில் கலந்துகொண்டு உள்ளனர்.

சிறப்பு நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி மாலை 6 மணி அளவில் நடக்கிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்