< Back
மாநில செய்திகள்
சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா - 25-ந் தேதி தொடங்குகிறது
மதுரை
மாநில செய்திகள்

சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா - 25-ந் தேதி தொடங்குகிறது

தினத்தந்தி
|
17 Oct 2022 12:45 AM IST

மதுரை அருகே உள்ள சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 25-ந் தேதி தொடங்குகிறது.

அழகர்கோவில்

மதுரை அருகே உள்ள சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 25-ந் தேதி தொடங்குகிறது.

சோலைமலை முருகன் கோவில்

மதுரை அருகே உள்ள அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுத்தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா தனி சிறப்புடையது.. இந்த திருவிழா வருகிற 25-ந் தேதி காலை 7.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சண்முகார்ச்சனையை தொடர்ந்து 10.30 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும், அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மதியம் 1 மணிக்கு சூரிய கிரகணத்தையொட்டி நடை சாத்தப்படும். பின்னர் மாலை 6 மணிக்கு கோவில் நடைவழக்கம் போல் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். அதை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

26-ந் தேதி காலையிலிருந்து மாலைவரை வழக்கம்போல் யாகபூஜைகளும் தீபாராதனைகளும், காலை 11 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 27-ந் தேதி காலை 11 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலை 3 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறும். 28-ந் தேதி காலை 11 மணிக்கு ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 29-ந் தேதி காலை 10 மணிக்கு சப்பர வாகனம் நடைபெறும்.

சூரசம்ஹாரம்

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந் தேதி காலையில் நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு வேல் வாங்குதல் நடைபெறும். பின்னர் 5.30 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெறும். இதில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடாகி கஜமுகா சூரனையும், சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து தல விருட்சமான நாவல் மரத்தடியில் பத்மா சூரனையும் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனையும். பின்னர் அவ்வைக்கு நாவல் கனி கொடுத்தல் நடைபெறும். 31-ந் தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும், பகல் 1 மணிக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் திருப்பாவாடை தரிசனம், பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்