தேனி
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
|கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள் முற்றுகையிட்டனர்
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் சம்பளம் குறைத்து வழங்குவதாக கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், சிவக்குமார் மற்றும் கம்பம் தெற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.281 சம்பளத்திற்கு பதிலாக ரூ.65 தான் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. வேலை செய்யும் இடத்திற்கு பணி மேற்பார்வையாளர், பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்து பார்வையிடுவதில்லை என புகார் செய்தனர். பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவர் வந்தவுடன் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படும் என்றார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.