ராமநாதபுரம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி
|மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பகுதியில் முகமதியா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை மூலம் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. போட்டிக்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபை தலைவர் தவ்பீக் கரீம் தலைமை தாங்கினார். முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மொய்னுதீன் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி வரவேற்றார். விளையாட்டு போட்டியில் செயலாளர் சாகுல் ஹமீது, பள்ளிகளின் செயலாளர் செய்யது அகமது கபீர், உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ் பாபு, ஷாஜகான், சலீம் உள்பட ஜமாத் நிர்வாகிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். விளையாட்டுப் போட்டிகளை உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் அஜீஸ் கனி, ரியாஸ்கான், கேசவன் பாபு, ரமேஷ் உள்ளிட்டவர்கள் விளையாட்டு போட்டியை நடத்தினர். போட்டியில் வேலு மாணிக்கம் பள்ளி மாணவர்கள் அணி முதலிடத்தையும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விளையாடிய பரமக்குடி ஆயிர வைசியர் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் அணி முதலிடத்தையும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இந்த பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களை சித்தார்கோட்டை முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மொய்னுதீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தி நினைவு பரிசுகளை வழங்கினர். போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முடிவில் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.