செங்கல்பட்டு
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் 1-ந்தேதி மாமல்லபுரம் வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
|ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் வருகிற 1-ந்தேதி மாமல்லபுரம் வருகை தருகின்றனர். இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஜி20 மாநாடு
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் ஜி20 மாநாடு வருகிற 31-ந்தேதி, பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதி சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர ஓட்டல், கிண்டி ஐ.ஐ.டி போன்றவற்றில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இவர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை மாலை 3 மணி முதல் 6 மணி வரை சுற்றி பார்த்து கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை எப்படி தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பது, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், எந்த மாதிரியான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேற்று மாமல்லபுரம் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பிப்ரவரி 1-ந்தேதி வரும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தை சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
அறிவுரை வழங்கினார்
அங்கு எந்தெந்த இடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவினர் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதேபோல் தமிழக கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரம் போலீசாரை வரவழைத்து வெளிநாட்டு விருந்தினர்கள் புராதன சின்னங்களை கண்டுகளிக்க செல்லும் பாதையில் என்ன மாதிரியான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். புராதன சின்னங்களில் எவ்வளவு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பது குறித்து வரைபடம் மூலம் விளக்கி கூறினார்.
அதேபோல் வெளிநாட்டு நாட்டு பிரதிநிதிகள் வருவதால் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சாலைகள் முழுவதும் சீரமைத்து கிருமி நாசினிகள் தெளித்து மாமல்லபுரம் நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பேரூராட்சி அதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கினார்.
அப்போது அவருடன் சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, செங்கல்பட்டு ஆர்.டி.ஒ. சஜ்ஜீவனா, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கனேஷ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக், மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில், மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.