< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்

தினத்தந்தி
|
22 Jun 2023 2:10 PM IST

மாமல்லபுரத்தில் நடந்த நிதி மற்றும் பொருளாதாரம் சம்மந்தமான 3-வது ஜி20 மாநாடு நிறைவடைந்ததையொட்டி வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.

ஜி20 மாநாடு

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பல நகரங்களி்ல் ஒவ்வொரு தலைப்பில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் 3 நாட்கள் நடைபெற்ற நிதி மற்றும் பொருளாதாரம் சம்மந்தமான 3-வது ஜி20 மாநாடு நேற்று நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில் நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த பிரதிநிதிகள், உலக வங்கி பிரதிநிதிகள் என மொத்தம் 100 பேர் பங்கேற்றனர்.

புராதன சின்னங்கள்

இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநதிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிலையில் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் பார்த்து ரசித்தனர்.

அப்போது மாமல்லபுரம் சுற்றுலாத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் கடற்கரை கோவில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோவில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினர்.

போலீஸ் பாதுகாப்பு

வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் வருகையை யொட்டி புராதன சின்னங்கள் முழுவதும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளி்ட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4- வது ஜி20 மாநாடு அடுத்த மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்