< Back
மாநில செய்திகள்
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை அறிவிப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Jan 2023 3:48 PM IST

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை தர உள்ளதால் புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு கூட்டம்

ஜி 20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி 20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுளளன.

அதன் அடிப்படையில் ஜி 20 மாநாட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் வருகிற 31-ந்தேதி மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இவர்கள் வருகிற 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தர உள்ளனர்.

வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் வருவதால் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வருகிற 1-ந்தேதி தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.

அன்று சுற்றுலா பயணிகள் யாரும் மாமல்லபுரம் புராதன சின்னங்களுக்குள் சென்று கண்டுகளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொல்லியல் துறையின் நுழைவு கட்டண மையங்களும் மூடப்படும். புராதன சின்னங்களில் அன்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டு மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் புராதன சின்ன நுழைவு வாயில் மையங்களில் நோட்டீஸ் ஒட்டி அறிவித்துள்ளது.

ஆய்வு

இந்த நிலையில் மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள், தூதர்கள், விருந்தினர்களை தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது, கிராமிய, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு, அனைத்து புராதன சின்னங்களிலும் செய்யப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகள், வெளிநாட்டு விருந்தினர்களை அழைத்து வரும் சாலை வழிகள் குறித்து தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட அதிகாரிகள், போலீஸ் குழுவினர் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில், மாமல்லபுரம் வருவாய் வருவாய் அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி உள்ளி்ட்ட அதிகாரிகள் பலர் உடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்