< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரம் வந்த ஜி20 மாநாட்டு விருந்தினர்கள்
மாநில செய்திகள்

மாமல்லபுரம் வந்த ஜி20 மாநாட்டு விருந்தினர்கள்

தினத்தந்தி
|
2 Feb 2023 4:30 AM IST

ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் 120 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மாமல்லபுரம்,

சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் ஆகியோர் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, நாதஸ்வர இசையுடன் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.

அப்போது வெண்ணை உருண்டைக்கல் வளாகத்தில் தப்பாட்டம் குழுவினர் இசைத்து கொண்டிருந்தபோது, தப்பாட்ட கலைஞர்களிடம் மேளங்களை வாங்கி வெளிநாட்டு விருந்தினர்கள் தப்பாட்டம் இசைத்து மகிழ்ந்தனர். ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்த பிறகு, மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் அங்கு நுழைவு வாயில் பகுதியில் தரையில் வரையப்பட்ட வண்ண கோலங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்தனர்.

வரலாற்று தகவல்கள்

பிறகு கடற்கரை கோவிலுக்குள் வந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் பாரம்பரிய வேட்டி அணிந்து மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களின் வரலாற்று தகவல்களை முழு விவரங்களுடன் எடுத்து கூறினர்.

அவர்களின் வரலாற்று தகவல்களை உற்று நோக்கி கேட்டறிந்த வெளிநாட்டினர் ஒவ்வொரு சிற்பங்களின் வடிவமைப்பு, அதன் தொன்மைகள், அது உருவாக்கப்பட்ட ஆண்டு குறித்த முழு விவரங்களை கேட்டு வியப்படைந்தனர். பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும்போது ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் கடற்கரை கோவிலின் அழகை வெளிநாட்டினர் பலர் ரசித்து குழு, குழுவாக நின்று அங்கு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட உலோக, மரச்சிற்ப கண்காட்சி திடல்களையும், கைத்தறி மூலம் பட்டு சேலை உருவாக்கும் அரங்கையும் செய்முறை விளக்கத்துடன் பார்த்து ரசித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

பின்னர் கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினர் பலர் பணம் கொடுத்து வாங்கி சென்றனர். அப்போது சிற்பங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்று கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி, மாமல்லபுரம் சிற்பகலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் வெளிநாட்டினருக்கு விளக்கினர்.

வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஐந்துரதம் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்