ஜி-20 மாநாடு: சென்னையில் இன்று முதல் 26ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை..!
|சென்னையில் ஜி-20 மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று முதல் 26-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னை,
ஜி-20 மாநாடு நிகழ்வுகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளை முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.
இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் ஜி-20 மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று முதல் 26-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ஜி-20 பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள், பயணம் செய்யும் வழித் தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் மற்றும் வழித் தடத்தில் டிரோன்கள் பறக்க விடத் தடை விதித்து, சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.