சென்னை
மதுபானம் தர மறுத்ததால் ஆத்திரம்: டாஸ்மாக் பார் சூறை; 4 பேருக்கு கத்தியால் வெட்டு
|மதுபானம் தர மறுத்ததால் டாஸ்மாக் பாரில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய 4 பேரை பார் ஊழியர்கள் கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் மதுக்கடை மூடிய பிறகு மதுபானம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள், தர மறுத்ததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். ஒரு கட்டத்தில் மதுபானம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், டாஸ்மாக் பாரில் இருந்த பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி டாஸ்மாக் பாரையே சூறையாடினர்.
இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள், அங்கிருந்த பாட்டில் மற்றும் கத்தியால் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை திருப்பி தாக்கினர். இதில் 4 பேருக்கு வெட்டு விழுந்தது. காயம் அடைந்த 4 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போரூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பார் ஊழியர்கள் மற்றும் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.