சென்னை
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவானதால் ஆத்திரம்: விடுதியில் அடைத்து வைத்து வாலிபரை தாக்கி சித்ரவதை
|துபாயில் இருந்து 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவான வாலிபரை விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
விடுதியில் அடைத்து...
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 34). இவர் துபாயில் 2 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 7-ந் தேதி துபாயில் இருந்து தமிழகம் வந்த நிலையில், ஆர்.கே.பேட்டையில் வசித்து வந்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆனந்தராஜை திடீரென கடத்தி வந்து அரும்பாக்கம், 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அறையில் தங்கி இருப்பவர்கள் சரமாரியாக தாக்கும் சத்தம் கேட்டதையடுத்து, சந்தேகத்தின் பேரில் விடுதி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் விடுதி நிர்வாகம் சார்பில் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரும்பாக்கம் போலீசார் விடுதி அறையின் கதவை திறந்து பார்த்த போது, அங்கிருந்த வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தங்கம் கடத்தல்
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, ஆனந்தராஜ் துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில், அங்கிருந்த நபர் ஒருவர் 400 கிராம் தங்கத்தை கொடுத்தனுப்பி சென்னையில் தனது உறவினர் இதயத்துல்லா என்பவரிடம் கொடுத்து விடுமாறு கூறியுள்ளார். அதற்காக ரூ.30 ஆயிரம் கமிஷன் தொகையையும் ஆனந்தராஜ் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகம் வந்த ஆனந்தராஜ் அந்த பொருளை உரியவரிடம் கொடுக்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதயதுல்லா மற்றும் அவரது உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில், ஆர்.கே.பேட்டையில் பதுங்கி இருந்தபோது, அவரை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்தராஜிடம் உறவினர் கொடுத்து அனுப்பிய 400 கிராம் (50 பவுன்) தங்கம் எங்கே என்று கேட்டு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. குருவி போல் 400 கிராம் தங்கத்தை எடுத்து வந்தவர் அதனை கொடுக்காமல் ஏமாற்றியதால் அரும்பாக்கத்துக்கு அழைத்து வந்து அறையில் வைத்து தாக்கி சித்ரவதை செய்தது தெரியவந்தது.
5 பேர் கைது
இதையடுத்து ஆனந்தராஜை கடத்தி சென்று தாக்கிய காரைக்காலை சேர்ந்த இதயதுல்லா(40), ரவிக்குமார்(38), பாலகன்(29), தினேஷ்(28), ராணிப்பேட்டையை சேர்ந்த நவீன்குமார்(25), ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவரிடம் துபாயில் இருந்து தங்கத்தை கொடுத்து அனுப்பிய நபர் யார்? என்பதை குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.