< Back
மாநில செய்திகள்
மேலும் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

மேலும் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
23 May 2024 5:30 AM IST

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது, கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் நேற்று லேசான மழை காணப்பட்டது.

ஆரஞ்சு அலர்ட்

இந்த நிலையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக, அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.

அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ந் தேதி மாலை நிலவும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதன் காரணமாக, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு - மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் வருகிற 25-ந் தேதி வரை அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான், தெற்கு வங்கக்கடல், குமரிக்கடலின் சில பகுதிகளில் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. தற்போது, பருவமழை படிப்படியாக முன்னேறி வருகிறது. அந்த வகையில், தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் பல பகுதிகள், குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. வழக்கமாக, கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், நடப்பாண்டு முன்கூட்டிய மே 31-ந் தேதி பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்