மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
"வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளை தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை!
மழைக்கால பாதுகாப்பு பணிகள், பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை!
சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தைக் கொண்டு இந்த பணிகளை செய்கிறார்கள். அவ்வாறு செய்யப்படாத பள்ளிகளில் மழைக்காலத்தில் ஏதேனும் விபத்துகள் நடந்தால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்துகள் ஏற்படக்கூடும். அது தவிர்க்கப்பட வேண்டும்!
மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டக் கூடாது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.