< Back
மாநில செய்திகள்
அதிகாரிகள் அலட்சியத்தால் மூதாட்டிக்கு உதவித்தொகை நிறுத்தம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அதிகாரிகள் அலட்சியத்தால் மூதாட்டிக்கு உதவித்தொகை நிறுத்தம்

தினத்தந்தி
|
17 Jun 2022 3:45 PM GMT

முதுகுளத்தூரில் வசதியானவரின் ஸ்மார்ட் கார்டில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மூதாட்டியின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் மூதாட்டிக்கு 2 மாதமாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.


முதுகுளத்தூரில் வசதியானவரின் ஸ்மார்ட் கார்டில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மூதாட்டியின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் மூதாட்டிக்கு 2 மாதமாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.

உதவித்தொகை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீரனூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் மனைவி சிவகாளி (வயது75). இவரின் கணவரும் ஒரே மகனும் இறந்துவிட்ட நிலையில் ஆதரவின்றி அரசின் முதியோர் உதவித்தொகையை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள ஓட்டு வீட்டில் இருக்க அச்சப்பட்டு வீட்டின் வாசலில் வசித்து வரும் சிவகாளிக்கு கடந்த 2 மாதங்களாக உதவித்தொகையை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்திவிட்டார்களாம்.

இதுகுறித்து யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்து வரும் நிலையில் அக்கம்பக்கத்தினர் மூலம் விசாரித்துள்ளார். அப்போது அதிகாரிகள் அவரின் பெயர் தவறுதலாக வசதியானவரின் ஸ்மார்ட் கார்டில் சேர்ந்து உள்ளதால் உதவித்தொகையை நிறுத்திவிட்டதாக தெரிவித்து உள்ளார்களாம். நேரில் வந்து விசாரிக்காமல் அதிகாரிகள் செய்த தவறால் மூதாட்டி பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த உதவித்தொகையை மட்டும் வைத்து வாழ்ந்து வந்த சிவகாளிக்கு அதுவும் நிறுத்தப்பட்டு உள்ளதால் போவோர் வருவோரிடம் காபி, சாப்பாடு வாங்கித்தரும்படி கெஞ்சி கேட்டும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கொடுப்பதை வாங்கி சாப்பிட்டும் வாழ்ந்து வருகிறார். தனக்கு உதவித்தொகை கிடைக்க உதவுமாறு அந்த வழியாக செல்வோரை கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க மன்றாடி வருகிறார்.

மனு

உதவித்தொகையை நிறுத்தும் முன்னர் நேரில் வந்து அவரை பார்த்திருந்தால் நிற்க கூட முடியாமல் பசி பட்டினியால் வாடும் அவரின் பரிதாப நிலை தெரிந்திருக்கும். கண்ணீர் மல்க கெஞ்சும் சிவகாளிக்கு மாவட்ட நிர்வாகம் குறிப்பாக புதிய கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நடவடிக்கை எடுத்து உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக நேற்று பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் சத்தியமூர்த்தி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தார்.

மேலும் செய்திகள்