< Back
மாநில செய்திகள்
விடுதியில் தங்கி படிக்க பெற்றோர் அனுமதிக்காததால் விரக்தி... 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

விடுதியில் தங்கி படிக்க பெற்றோர் அனுமதிக்காததால் விரக்தி... 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
14 July 2024 2:50 AM GMT

விடுதியில் தங்கி படிக்க பெற்றோர் அனுமதிக்காததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் மாணவி, 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமாபுரம்,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், வள்ளுவர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகதீஸ்வரன் (48 வயது). இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தான பிரியா. இவர்களுக்கு அஸ்வந்தினி (21 வயது), ஆனந்தினி (18 வயது) என 2 மகள்கள்.

மூத்த மகள் அஸ்வந்தினி, ராமாபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அஸ்வந்தினி, மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது தங்கையான ஆனந்தினிக்கு வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. அவரை கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வைப்பதற்கான வேலைகளில் பெற்றோர் ஈடுபட்டு வந்தனர்.

தங்கையை மட்டும் விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்வதால், தன்னையும் விடுதியில் தங்கி படிக்க வைக்க வேண்டும் என அஸ்வந்தினி கூறினார். அதற்கு அவரது பெற்றோர், "உனது தங்கை தொலைதூரத்தில் உள்ள கல்லூரியில் படிப்பதால் விடுதியில் தங்கி படிக்க வைக்கிறோம். ஆனால் நீ, வீட்டுக்கு அருகிலேயே உள்ள கல்லூரியில் படிக்கும்போது எதற்காக விடுதியில் தங்கி படிக்க வேண்டும்" என்று கூறி மறுத்துவிட்டனர்.

இதனால் விரக்தி அடைந்த அஸ்வந்தினி, நேற்று முன்தினம் நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனி பகுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ராமாபுரம் போலீசார், பலியான அஸ்வந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்