திருவள்ளூர்
ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி சாவு - தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல்
|ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி பரிதாபமாக இறந்தார். தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33). பழவியாபாரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 10-ந்தேதி சிலம்பரசன் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிலம்பரசன் மாயமானது குறித்து அவரது நண்பர்களான நேதாஜி, தீபக், ஜோதீஸ்வரன் ஆகிய 3 பேர் மீது சிலம்பரசனின் உறவினர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 10-ந்தேதி சிலம்பரசனுடன் மேற்கண்ட நபர்கள் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டைக்கு சென்ற நிலையில், அனைவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. அங்கு உள்ள தெலுங்கு கங்கை கால்வாயில் சிலம்பரசன் குளிக்கச்சென்றதாகவும், அப்போது அவர் மாயமானதாக தெரியவந்தது. இதுகுறித்து உடன் சென்ற நண்பர்கள் சிலம்பரசனின் உறவினர்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி சம்பவ இடத்தில் சிலம்பரசனின் உடலை கைப்பற்றிய ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை போலீசார் அடையாளம் தெரியாத நபர் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி முடித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை அடக்கம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் எதிரே ரெட்டம்பேடு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தங்களது சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டதால் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.