தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
|தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வலியுறுத்தி, வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் மீதமுள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீரை வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவது ஆகிய பணிகளுக்கு அனுமதி அளித்தது.
கழிவுகளை அகற்ற அனுமதி
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக, தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தனர்.
அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் ஜிப்சம் கழிவுகள் லாரிகள் மூலம் எடுக்கப்பட்டு பல்வேறு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
3,047 டன் ஜிப்சம் அகற்றம்
இதுவரை ஆலையில் இருந்து 3 ஆயிரத்து 47 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. இந்த பணிகளை உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையொட்டி ஆலையை சுற்றிலும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.