< Back
மாநில செய்திகள்
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
சேலம்
மாநில செய்திகள்

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
24 Feb 2023 2:33 AM IST

வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்டநதியில் நேற்று காலை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

வாழப்பாடி,

ஆனைமடுவு அணை

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67 அடி உயர ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மூலம் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர் பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது.

விவசாயிகள் கோரிக்கை

இந்தநிலையில், கடந்த 2 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 நாட்களுக்கு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்காக வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கவும், அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு வலது வாய்க்காலிலும், இடது வாய்க்காலிலும் தண்ணீர் திறக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தண்ணீர் திறப்பு

அதன்படி நேற்று காலை 8 மணியளவில் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து தலைமை மதகு வழியாக வசிஷ்டநதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, உதவி பொறியாளர் சண்முகம், அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளும், ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்