< Back
மாநில செய்திகள்
அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3-ம் தேதி செம்மொழித் தமிழ்நாளாக கொண்டாடப்படும் - அமைச்சர் சாமிநாதன்
மாநில செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3-ம் தேதி செம்மொழித் தமிழ்நாளாக கொண்டாடப்படும் - அமைச்சர் சாமிநாதன்

தினத்தந்தி
|
24 Jun 2024 9:53 PM IST

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை,

சட்டசபை கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

  • அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25-ம்தேதி "தமிழ்மொழித் தியாகிகள் நாளாக" கடைபிடிக்கப்படும். பிறமொழித் திணிப்பால் தாய்மொழி தமிழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து இன்னுயிரை ஈந்த மொழித்தீரர்களின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னையில் உள்ள நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.
  • செம்மொழித் தமிழ்நாள் விழா ஆண்டுதோறும் ஜூன் 3-ம்தேதி கொண்டாடப்படும். அந்நாளில் செம்மொழியின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தி, பரிசினை வழங்க ரூ.1 கோடியே 88 இலட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.
  • ரூ. 91.35 லட்சம் மதிப்பீட்டில் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
  • சிறந்த நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும். முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி, 33 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும் பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ. 25 ஆயிரமாகவும் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
  • கவிஞர் முடியரசன் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
  • முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு விருதுத் தொகை ரூ 10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை, தகுதியுரை வழங்கப்படும்.
  • சண்டிகர் வாழ் தமிழ் இளந்தலைமுறையிடம் தமிழ் மொழிப் பயிற்சி, ஆடற்கலை, இசைக்கலை, தையற்கலை மற்றும் எழில் புனைவு உள்ளிட்ட நுண்கலைகளைப் பயிற்றுவிக்க ஏதுவாக சண்டிகர் தமிழ் மன்றக் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
  • டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் மொழிப் பயிற்சி, நடனம் & இசை வகுப்புகள், கலை இலக்கிய நிகழ்ச்சிகள், தமிழ் இணையக் கருத்தரங்குகள் நடத்திட ஏதுவாக, கலையரங்கத்தினைப் புனரமைத்திட டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்