ஜோலார்பேட்டை: பட்டப்பகலில் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் கொள்ளை - மர்ம ஆசாமிகள் கைவரிசை
|ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் ஸ்கூட்டியில் வைத்து இருந்த ரூ.1 லட்சம் கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே புதுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கர்ணன் இவரது மகன் கதிர்வேல் (வயது 55) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது உறவினரின் திருமண செலவிற்காக தனது வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்காக நேற்று வங்கிக்கு தனது மனைவியுடன் மொபட்டில் வந்தார். அதன்பின் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் வைத்து பூட்டினார்.
அதனைதொடர்ந்து துணி எடுப்பதற்காக வக்கணம்பட்டி அருகே உள்ள துணி கடைக்கு சென்றார். அங்கு துணி கடை முன்பு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர். பின்னர் வெளியே வந்து வண்டியை பார்த்த போது பெட்டியில் இருந்த பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து கதிர்வேல் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வங்கி மற்றும் துணி கடைகளில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் துணிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ பதிவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில், வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த கதிர்வேல் பின் தொடர்ந்து வந்த வாலிபர் நடந்து சென்றார். அதனைத் தொடர்ந்து மேலும் இருவர் சேர்ந்து மொபட்டில் உள்ள பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
பட்டபகலில் ஸ்கூட்டியில் வைத்து இருந்த ரூ. 1 லட்சம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி பொதுமக்களுடையை பீதி ஏற்பட்டுள்ளது.