< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்; 3 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்; 3 பேர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2023 7:18 PM IST

மீஞ்சூர் அருகே நண்பருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டிக்கொலை செய்து கிணற்றில் வீசிய 3 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

நண்பர்களுடன் சென்ற வாலிபர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய ராமாரெட்டிபாளையம், லட்சுமிபுரம் 2-வது தெருவில் வசித்து வந்தவர் அஜித் (வயத 25). கடந்த 16-ந் தேதி இரவு நண்பர்களுடன் சென்ற அஜித் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடனே மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இந்நிலையில் ராமாரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மீஞ்சூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

கிணற்றில் பிணமாக மீட்பு

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் உடலை மீட்டனர். அப்போது கிணற்றில் பிணமாக கிடந்தவர் அஜித் என தெரியவந்தது. அவரது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது.

பின்னர் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களான ராமாரெட்டிபாளையம் பச்சையம்மன் நகரை சேர்ந்த நாகராஜ் (21), வசந்தகுமார், 18 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

வெட்டிக்கொலை

சம்பவத்தன்று அஜித் தனது நண்பர்கள் நாகராஜ் (21), மோகன் (22), சாய் (22), கணேஷ் (25), வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் ேசர்ந்து ஒன்றாக மது அருந்தினர். மது போதையில் அஜித் நண்பர்களுடன் வாய் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நண்பர்கள் அஜித்தை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் அவர் அங்கேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் அவரது கை கால்களை துணியால் கட்டி ஏரிக்கரை அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் நண்பர்கள் உடலை வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய நாகராஜ், வசந்தகுமார், 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் செங்குன்றம் உதவி ஆணையர் ராஜா ராபர்ட், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ஆகியோர் கொலையில் தொடர்புடைய மேலும் 3 நண்பர்களை தேடி வருகின்றனர். நண்பர்களே கொடூரமாக கொலை செய்து வாலிபரை கிணற்றில் வீசிய சம்பவம் மீஞ்சூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்