சேலம்
தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கிய நண்பர் கைது
|சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகே தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய நண்பர் கைது செய்யப்பட்டார்.
சங்ககிரி:-
சங்ககிரி புதிய பஸ்நிலையம் கழுகுமேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவரது செல்போனுக்கு கடந்த 14-ந் தேதி இரவு அக்கமாபேட்டையை சேர்ந்த இவருடைய நண்பர் சீனிவாசன் (38) என்பவர் பேசினார். அப்போது மதுபாட்டில் வாங்கி வைத்துள்ளேன், நீ சைடிஸ் வாங்கி கொண்டு வா என அவர் கூறி உள்ளார். இதையடுத்து தமிழரசன் சைடிஸ் வாங்கி கொண்டு இருந்த போது மற்றொரு நண்பர் பாபு என்பவர் காரில் வருமாறு கூப்பிட்டுள்ளார். அவருடன் சென்ற தமிழரசன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. பின்னர் இரவு 9 மணியளவில் அக்கமாபேட்டை ஆர்.கே.நகரில் பாபு காரில் கொண்டு வந்து தமிழரசனை இறக்கி விட்டு விட்டு சென்று உள்ளார்.
அங்கு மதுபாட்டிலுடன் இருந்த சீனிவாசன், தமிழரசனை கண்டதும் கோபத்துடன் தகாதவார்தைகளால் திட்டி உள்ளார். மேலும் ஆத்திரத்தில் தமிழரசனின் தலையில் சீனிவாசன் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தமிழரசன் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சீனிவாசன் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.