தேனி
40 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் கவிஞர் வைரமுத்துவின் பள்ளி நண்பர்
|தேனியில் கவிஞர் வைரமுத்துவின் பள்ளி நண்பர் 40 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.
தேனி மதுரை சாலையில் பழைய டி.வி.எஸ். சாலை சந்திப்பு பகுதியில் பல ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் ராமசாமி கூறியதாவது:-
எனக்கு வயது 70 ஆகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைத்து வருகிறேன். எனது சொந்த ஊர் பெரியகுளம் அருகே வடுகப்பட்டி. கவிஞர் வைரமுத்துவும், நானும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அப்போதே அவர் தனிமையில் அமர்ந்து எதாவது எழுதிக்கொண்டே இருப்பார். குடும்ப சூழ்நிலையால் நான் 8-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. வைரமுத்துவுக்கு என்னை இப்போது நினைவு இருக்கிறதா என்று தெரியாது. ஆனால், அவரோடு சிரித்து பேசி விளையாடிய காலங்கள் எனக்கு நினைவு இருக்கிறது. நான் முதலில் சில கூலிவேலைகள் செய்து வந்தேன். பின்னர் புதிய செருப்புகள் தைப்பதோடு, பழைய செருப்புகளை தைத்துக்கொடுக்கும் தொழிலில் ஈடுபட தொடங்கினேன். எனது தந்தையிடம் இருந்து இந்த தொழிலை கற்றுக்கொண்டேன். எனக்கு 2 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இப்போதும் தோல் செருப்புகள் கேட்பவர்களுக்கு நானே செய்து கொடுக்கிறேன். அதற்கான மூலப்பொருட்கள் முன்பு தேனியில் கிடைத்தது. தற்போது திண்டுக்கல்லில் தான் கிடைக்கிறது. முன்பெல்லாம் தினமும் 20-க்கும் மேற்பட்ட புதிய செருப்புகளை தைத்துக்கொடுக்க ஆர்டர் வரும். பிய்ந்து போன செருப்புகளை தைக்கவும் பலர் வருவார்கள். செருப்பை கொடுத்துவிட்டு சென்றால் தைத்துக்கொடுக்க ஓரிரு நாட்கள் ஆகும். அவ்வளவு மவுசு இந்த தொழிலுக்கு இருந்தது. தேனியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் உள்ளனர். பலரும் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.