இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு - கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
|கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டு நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், அடிக்கடி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இதனால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கடுமையான அவதி அடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்வாரிய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் திடீரென பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.