சட்டங்களை திருத்தங்கள் மூலமாகவே வலுப்படுத்த முடியும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
|‘சட்டங்களை திருத்தங்கள் மூலமாகவே வலுப்படுத்த முடியும்' என சென்னையில் நடந்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய கட்டிட திறப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
கட்டிடம் திறப்பு விழா
சென்னை எழிலக கட்டிட வளாகத்தில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளை செயல்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பாயத்தின் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா எழிலக கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளை நீதித்துறை உறுப்பினர் எம்.வேணுகோபால் வரவேற்றார்.
விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்துவைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
வெளிப்படைத்தன்மை
வணிக செயல்பாடுகள் குறித்து கம்பெனி சட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும் என உறுதியளிக்கிறேன். இதை அடிப்படையாகக் கொண்டே வணிக ரீதியான செயல்பாடுகளில் இந்தியா வெளிப்படைத் தன்மையுடன் இருக்க முடியும். இங்குள்ள சட்ட திட்டங்களால் யாரையும் மோசடி செய்து விட முடியாது என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.
சட்ட திருத்தங்கள் தேவை
அதே நேரம், திருத்தங்கள் மூலமாகவே சட்டங்களை வலுப்படுத்த முடியும். இதனாலேயே சட்டத் திருத்தங்களை கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.