< Back
மாநில செய்திகள்
தீப்பெட்டி கேட்ட தகராறில் வெறிச்செயல்: வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தீப்பெட்டி கேட்ட தகராறில் வெறிச்செயல்: வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

தினத்தந்தி
|
25 April 2023 11:37 AM IST

திருவொற்றியூரில் தீப்பெட்டி கேட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் யாசின் (வயது 22). இவர், பெரம்பூரில் துணிக்கடை நடத்தி வந்தார். கடந்த 22-ந்தேதி திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் அருகில் கடற்கரை சாலையில் நண்பர்களான அஜித், ஹரி பிரசாத், சந்தோஷ், முபாரக், இம்ரான் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

இவர்களுக்கு அருகில் மது குடித்து கொண்டு இருந்த திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்த தேவராஜ் என்ற தேவா (25) சஞ்சய் யாசின் நண்பர் அஜீத்திடம் தீப்பெட்டி கேட்டார். இதில் வாய்த்தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கு இடையே மோதலாக மாறியது.

அஜீத்துக்கு ஆதரவாக சஞ்சய்யாசின், தேவாவை தாக்கி விட்டு திருச்சினாங்குப்பம் கடற்கரையில் வந்து படுத்தார். அப்போது தேவராஜ், பிரதீப் (21), காலடிப்பேட்டையை சேர்ந்த பரத் (21), சந்தோஷ் (21), கணக்கர் தெருவை சேர்ந்த கிருஷ்ணா (21), ராஜா சண்முகம் நகர் பாலா (21), தண்டையார்பேட்டை பகுதி எல்.என்.ஜி. காலனியைச் சேர்ந்த சதீஷ் (23) மற்றும் 18 வயதான கல்லூரி மாணவர் ஆகிய 8 பேர் சேர்ந்து சஞ்சய்யை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தினர். அவர்களிடம் இருந்து தப்பி தெருவில் ஓடிய சஞ்சய்யை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றனர்.

இந்த கொலை தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜ், 18 வயதான கல்லூரி மாணவர் உள்பட 8 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழரசன் (20) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்